தலைமை செயலகத்தில் தவெகவினரின் ரீல்ஸ் மோகத்தை தடுக்க முதல்வர் உள்பட அமைச்சர்கள் அறை முன் 2 காவலர் பாதுகாப்பு

 

* ரகசிய கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு
* தடை மீறி வீடியோ எடுத்தால் போன் பறிமுதல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு தமிழகத்தில் ரீல்ஸ் வீடியோ மோகம் அதிகமாக காணப்படுகிறது.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்தும், தவெகவினர் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

வழக்கம் போல் தலைமை செயலகம் வரும் தவெகவினர் தங்களது செல்போனில் முதல்வர் விஜய்யை வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவு செய்து வரும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் உத்தரவுப்படி பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இனி தலைமை செயலகத்திற்கு வரும் தவெகவினர் யாரும் அமைச்சர்கள் அறை முன்பும், அமைச்சர்களுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ எடுப்பதை முற்றிலும் தடுக்க 70 ஆண்டுகள் இல்லாத புதிய நடைமுறையாக, தமிழக தலைமை செயலகத்தில் உள்ள 35 அமைச்சர்கள் அறையிலும், குறிப்பாக முதல்வர் அறை மற்றும் தவெக அமைச்சர்களாக உள்ள 31 அறைகள் முன்பும் மற்றும் முக்கிய பகுதிகளுக்குள் பொதுமக்கள் பார்வையாளர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் செல்ல நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறை முன்பு 4 காவலர்கள், அமைச்சர்கள் அறைகள் முன்பு 2 காவலர்கள் வரை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி போடப்பட்டுள்ளது. இதுதவிர தலைமை செயலகத்தில் ரகசிய கேமராக்கள் நேற்று முன்தினம் ரகசியமாக அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணி போலீசார் மூலம் தலைமை செயலக வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் அறைகள் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசு அதகிாரிகளின் முன் அனுமதி இல்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு செல்போன் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத நடைமுறையாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் விருதுநகரில் யாருடைய தயவால் வென்றார்: ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

சென்னை: தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் யாருடைய தயவால் வெற்றி பெற்றார் என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: சட்டமன்றத்தில் ‘இன்ஸ்டாகிராம்’, சமூகவலைத்தளம் மூலம் ஆட்சிக்கு வந்தது போன்று, அதே பாணியில் த.வெ.க. பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்புகின்ற வகையில் ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் பேட்டியளித்து அது வைரலாக ஓடி கொண்டிருக்கிறது. அதில் அவர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.வை பற்றி அவதூறாக இன்னொருவர் ஐ.டி. மூலம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

எனவே பேட்டியளித்த பெண் மீது தி.மு.க. சார்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாதாரணமாக அவதூறு வழக்கு செய்தால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் தான் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால் இதுபோன்று தவறான ஐ.டி.யை பயன்படுத்தி அவதூறான தகவலை பரப்பினால் அதற்கு ஆயுள் தண்டனை. எனவே இதுபோன்று அவதூறு பரப்ப கூடாது என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எச்சரிக்க வேண்டும். குறிப்பாக அந்த தலைவரும் சொல்ல வேண்டும்.

தி.மு.க.வை விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் யாருடைய தயவால் வெற்றி பெற்றார்? என்பதை உணர வேண்டும். அ.தி.மு.க.வில் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் சொரணையில் கொஞ்சம் இருந்தால் மாணிக்கம் தாகூர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: