பதிவுத்துறை, ஆர்டிஓ அலுவலகம், வருவாய்த்துறைகளில் புகார் எதிரொலி: லஞ்சத்தை ஒழிக்க விஜிலென்ஸ் ஏடிஜிபியாக அருண் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியானார் அன்பு

 

சென்னை: தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்கவும், லஞ்சம் நடைபெறாமல் தடுக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள் அதிரடியாக மாற்றப்பட்டு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பு தமிழக சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டிஜிபி அருண், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை அடுத்த சின்ன திருப்பதியை சேர்ந்தவர். சென்னையில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தார். கடந்த 1998ம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் எஸ்பியாகவும், சென்னை மாநகரில் அண்ணாநகர் மற்றும் பரங்கிமலை துணை கமிஷனராகவும், சிபிசிஐடி எஸ்பியாகவும் சிறப்பாக பணியாற்றினர்.

பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல சட்டம் -ஒழுங்கு கூடுதல் கமிஷனர், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக சிறப்பாக பணியாற்றினார். அதனை தொடர்ந்து திருச்சி மற்றும் ஆவடி மாநகர கமிஷனராக பணியாற்றினார். சட்டம்- ஒழுங்கில் சிறப்பாக பணியாற்றியதால், தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருண் நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலத்தில் தான், மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.

அவரது பணிக்காலத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம், கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா, வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்து சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் ஆகியோர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அதன்பிறகு சென்னையில் குற்றங்கள் பெருமளவில் குறைந்தது. கூடுதல் டிஜிபி அருண் காவல்துறையில் சிறப்பான பணிக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கம், தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழிக்கவும், லஞ்சம் நடைபெறாமல் தடுப்பதற்காகவும், அவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி, மாநகராட்சிகளில் லஞ்சப் புகார்கள் அதிகமாக உள்ளன. அதில் ஆர்டிஓ அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகமாக லஞ்சப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இதுபோன்ற துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதோடு, மக்களுடன் நேரடியாக தொடர்புடைய துறைகளில் லஞ்ச ஊழலை ஒழிக்க அவருக்கு சிறப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் லஞ்சத்துக்கு எதிரான வேட்டை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: