சென்னை: மற்ற முதலமைச்சர்களை போல தினசரி அறிக்கைகள், விவாதம் விஜய் செயல்பாட்டில் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கோவையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
கோவை சம்பவம் குறித்து நடவடிக்கை முதலமைச்சர் உத்தரவின் பெயரில், வேகமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி நேரில் சென்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இது உண்மையில் பாராட்டத்தக்கது. பெண்கள் பாதுகாப்பில், மேலும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்காது என்று, சிலர் கருத்து கூறுகின்றனர். ஒவ்வொருவரின் கருத்தும் வேறு மாதிரியாக இருக்கும். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் மட்டுமல்ல, விஜய் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார். மக்களுக்கு எது தேவையோ, அதை அந்த நேரத்தில், முதலமைச்சர் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார். மற்றவர்களைப் போல், தினசரி அறிக்கைகள் வெளியிடுவதோ, விவாதிப்பதோ, அவருடைய செயல்பாட்டில் இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் வெட்டுகள் குறித்து, மின் துறை அமைச்சர் ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
