காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை: இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது வழக்கு

 

சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரத்தை சேர்ந்த விவசாயி அந்தோணிராஜூ (63), இடப்பிரச்னை விவகாரத்தில் சிவகிரி காவல்நிலையத்தில் விசாரணைக்கு கடந்த 21ம் தேதி சென்றபோது அவரை இன்ஸ்பெக்டர் முரளிதரன் அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜூ பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அந்தோணிராஜூவின் மனைவி செல்லம்மாள், மகன் இசக்கிதுரை மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிவகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் இரவு ஏடிஎஸ்பி ஜூலியர் சீசஸ், தாசில்தார் அப்துல் சமது ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்தோணி ராஜூ உறவினர்கள், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது ெகாலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து 5 மணி நேர போராட்டத்தை கைவிட்டனர். இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் முரளிதரன், ரைட்டர் கனகராஜ், காவலர் முத்து கண்ணன் ஆகிய 3 போலீசார் மீது அவதூறாக பேசுவது 294 (பி), தாக்கி காயம் ஏற்படுத்துதல் 323, தற்கொலைக்கு தூண்டுவது 306 ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நெல்லை சரக டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப்பின் நேற்று மாலை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

Related Stories: