புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உட்பட முதல்கட்டமாக 66 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கி கவுரவித்தார். கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒன்றிய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருது 131 பேருக்கு குடியரசு தினத்திற்கு முந்தைய நாளான கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. 5 பேர் பத்ம விபூஷன் விருதுக்கும், 13 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், 113 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கும் தேர்வாகினர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். கலைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக பத்ம விபூஷன் விருது மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு வழங்கப்படுகிறது.
அவருக்கான விருதை அவரது மனைவியும், நடிகையும், எம்பியுமான ஹேமா மாலினி பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு பத்ம பூஷன் விருதினை ஜனாதிபதி முர்மு வழங்கினார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே, வீரப்பனுக்கு எதிரான அதிரடிப்படை நடவடிக்கையில் தலைமை தாங்கிய ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார், மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர்.ஸ்ரீதர், ஓதுவார் என். சுவாமிநாதன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
மறைந்த ஓவியக் கலைஞர் ஆர்.கிருஷ்ணன் கிட்னாவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழநிவேலு, பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ விருதை பெற்றனர். முதல் கட்டமாக 2 பேருக்கு பத்ம விபூஷன், 6 பேருக்கு பத்ம பூஷன், 58 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
