புதுடெல்லி: சிபிஎஸ்இயின் விடைத்தாள் திருத்தும் ஓஎஸ்எம் திட்டத்தின் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள்களே மாறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்ஐ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை முழுமையாக கணினி வழி டிஜிட்டல் முறையில் திருத்தும் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) எனப்படும் புதிய தொழில்நுட்ப திட்டம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்தாண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3 சதவீதம் குறைந்த நிலையில், பல மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை என புகார் கூறி உள்ளனர். விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினியில் ஏற்றும்போது பக்கங்கள் தெளிவற்றதாக இருந்ததாகவும், சர்வர் முடக்கம் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் சேமிக்கப்படாமல் மறைந்து போதல் போன்ற தொழிற்நுட்பப் பிரச்னைகளை எதிர் கொண்டதாக விடைத்தாள் திருத்திய சில ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிப்பெண் குறைந்த மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த நிலையில் அதிலும் அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. திருத்தப்பட்ட தங்களின் விடைத்தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மாணவர்கள் கட்டணம் செலுத்தி பார்க்க முடியும். அவ்வாறு ஸ்கேன் நகலை பார்த்த டெல்லியை சேர்ந்த வேதாந்த் என்ற மாணவர், சிபிஎஸ்இயால் பதிவேற்றப்பட்ட இயற்பியல் விடைத்தாள் தன்னுடையது அல்ல என குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர், விடைத்தாளில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல என்றும் முழுமையாக வேறொரு மாணவரின் விடைத்தாள் அது என்பதால் நொறுங்கிப் போயிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதே போல, மற்றொரு 12ம் வகுப்பு மாணவியான சஞ்சனாவும் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் விடைத்தாள் தன்னுடையது அல்ல என கூறி உள்ளார். 70 மதிப்பெண்ணுக்கு வெறும் 11 மதிப்பெண் மட்டும் பெற்றதால் அதிர்ச்சி அடைந்து மறுமதிப்பீட்டிற்கு சஞ்சனா விண்ணப்பித்த நிலையில், விடைத்தாளே மாறியிருப்பது கண்டு அதிர்ந்துள்ளார். இதுபோல பல மாணவர்களும் தங்கள் விடைத்தாள் மாறியிருப்பதாக கூறி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ள நிலையில், மறுமதிப்பீட்டு பணிகள் தொடங்கப்பட்டதிலிருந்து புகாரளிக்கப்பட்ட அனைத்து தொழில்நுட்ப பிரச்னைகளையும் சென்னை ஐஐடி மற்றும் ஐஐடி கான்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து, தடையற்ற செயல்முறையை உறுதிசெய்ய சிபிஎஸ்இக்கு உதவுவார்கள் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பிரதமரின் ஆணவத்தை ஜென்-ஸிக்கள் நொறுக்கும்
விடைத்தாள் மாறியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டெல்லி மாணவன் வேதந்தாவை சமூக ஊடகத்தில் பலரும் வசைமாறி பொழிந்தனர். அவரை பாகிஸ்தானியர் என்றும் தேச துரோகி என்றும் திட்டினர். அந்த மாணவருக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில், ‘‘மோடி-தர்மேந்திர பிரதான் கூட்டணி மற்றொரு கல்வி நிறுவனத்தையும் முறைகேடுகளின் அடையாளமாக மாற்றிவிட்டது. ஓஎஸ்எம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் செவிசாய்க்காமல் கல்வி அமைச்சர் பிரதான் தொடர்ந்து நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
தனது விடைத்தாள் மாறியதாக கருதிய 17 வயது மாணவர் ஒருவர் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சமூக ஊடகத்தில் தனது குறையை பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த மாணவரை பாஜவின் ஐடி பிரிவு தேச விரோதி என முத்திரை குத்துகிறது. உண்மை என்னவென்றால் மோடி அரசு இளைஞர்களுக்கும் ஜென்-ஸி தலைமுறையினருக்கும் பயப்படுகிறது. அவர்கள் இப்போது கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்க துணிபவர் எவராயினும், இந்த அரசு அவர்களை இழிவுபடுத்தும். மிரட்டும், நசுக்கும். ஆனால் இளைஞர்கள், இதே ஜென்-ஸி தலைமுறையினர் உங்கள் ஆணவத்தை நொறுக்குவார்கள்’’ என கூறி உள்ளார்.
கல்வி அமைச்சரை நீக்க வேண்டும்
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில், ‘‘சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் நடந்த மிகப்பெரிய முறைகேடுகள் பல லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்தை இருட்டாக்கி உள்ளது. எனவே, பிரதமர் மோடி உடனடியாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஓஎஸ்எம் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கடமைப்பட்டுள்ளார். திறமையின்மையால் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் இந்த அமைச்சர் ஏன் இவ்வளவு காலம் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்’’ என கூறி உள்ளார்.
