டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லி: டெல்லியில் உள்ள காவிரி ஆணையத்தின் அலுவலகத்தில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28ம் தேதி நடக்க இருந்த காவரி மேலாண்மை ஆணையத்தின் 51ஆவது கூட்டம் நாளை நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்தர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழகத்திற்குத் தரப்பட வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. காவிரி ஆணைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகதாது விவகாரம் இடம்பெறவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய அரசு கடந்த 2018 ஜூன் 01 ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை முதன் முதலாக அமைத்தது. இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை நியாயமாக பகிர்ந்து வழங்குவதாகும். மேலும், அணைகளில் உள்ள நீர்மட்டம், மழைப்பொழிவு நிலை, விவசாய தேவைகள் போன்றவற்றை கண்காணித்து தேவையான முடிவுகளை எடுப்பதிலும் ஆணையம் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறது.

கர்நாடகாவிடமிருந்து தமிழகத்திற்கு மாதவாரியாகத் தரப்பட வேண்டிய நீர், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் வானிலை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

 

 

 

Related Stories: