திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடையில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை அடித்துக் கொன்ற வழக்கில் 12 பேரின் தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள முக்காலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மது. ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இந்த வாலிபரை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், 13 பேருக்கு 7 வருடம் கடுங்காவல் சிறையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
முனீர் என்பவருக்கு 3 மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் 12 பேருக்கு வழங்கப்பட்ட 7 வருட சிறைத் தண்டனை ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டது. முனீருக்கு வழங்கப்பட்ட 3 மாத தண்டனை 1 வருடமாக உயர்த்தப்பட்டது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான உசேன் விடுவிக்கப்பட்டார்.மேலும் மதுவின் தாய் மல்லிக்கு ரூ. 30 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
