4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ‘பணவீக்க நாயகன்’ மீண்டும் சுரண்டுகிறார்: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

 

புதுடெல்லி: கடந்த 10 நாளில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘பணவீக்க நாயகன்’ மீண்டும் சுரண்டுகிறார் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து, கடந்த 10 நாட்களில் 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பணவீக்க நாயகன் மோடி மீண்டும் சுரண்டுகிறார்.

அவர் பெட்ரோல், டீசல் விலைகளை தவணை முறையில் உயர்த்துகிறார். இதன் மூலம் உங்கள் பாக்கெட் சத்தமின்றி கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்படுவதை உறுதி செய்கிறார். பல மாதங்களாக வரவிருக்கும் பொருளாதார புயல் குறித்து நான் எச்சரித்து வந்தேன். ஆனால் மோடி அவர்கள் தனது வழக்கமான பாணியில், தேர்தல்களில் மும்முரமாக இருந்தார். தேர்தல்கள் முடிந்த மறுகணமே, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.7 வரை உயர்த்தி விட்டார். இந்த விலை உயர்வு தொடர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்க நாயகனுக்கு ஒரே ஒரு வேலைதான். தேர்தல்களின் போது வாக்குறுதிகளை அளிப்பது, மற்ற நேரங்களில் மக்களின் பாக்கெட்டை சுரண்டுவது’’ என கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘எரிபொருள் கொள்ளை எனும் தினசரி தாக்குதல் இன்னும் முடிவடையவில்லை. மோடி அரசு 2014ம் ஆண்டு லிட்டருக்கு ரூ.71.41ஆக இருந்த பெட்ரோல் விைலயை 2026ம் ஆண்டில் ரூ.102.12ஆக உயர்த்தியுள்ளது. இது 43.01சதவீத உயர்வாகும். இதேபோல டீசல் விலையை லிட்டருக்கு ரூ.56.71ல் இருந்து ரூ.95.20ஆக உயர்த்தியுள்ளது. இது 67.87 சதவீத உயர்வாகும். இந்த தினசரி கொள்ளையால் யார் பயனடைகிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

ரஷ்யாவும், ஈரானும் நமக்கு மலிவான மற்றும் போதுமான எண்ணெய், எரிவாயுவை வழங்குகின்றன. பிரதமர் மோடி ஏன் அவர்களிடமிருந்து மலிவான எண்ணெயை வாங்கவில்லை? அதிகரித்து வரும் பணவீக்கத்தால் 140 கோடி மக்கள் இன்னல்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனாலும் நாம் ரஷ்யாவிடமிருந்தோ ஈரானிடம் இருந்தோ எண்ணெய் வாங்கவில்லை. இதில் பிரதமருக்கு என்ன நிர்பந்தம் இருக்கிறது?’’ என கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்வாலா அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2004 முதல் 2014 வரை கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலராக இருந்தது.

கடந்த 12 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக ஒரு பேரல் 70 டாலராக இருக்கிறது. அப்படி என்றால் 38 டாலர் குறைந்திருக்கிறது. கச்சா எண்ணெயின் இன்றைய விலை கூட ஒரு பேரல் 98.6 டாலர்தான். எனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, பெட்ரோல், டீசல், காஸ், சிஎன்ஜி விலைகளை பாஜ அரசு குறைக்க வேண்டும்’’ என்றார்.

முதிர்ச்சியற்றவர் ராகுல்
ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி புத்தியில்லாதவர், பக்குவமில்லாதவர், அராஜகவாதி. அவர் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கிறார். உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மிக மிக குறைவு. ராகுல் காந்தியின் நோக்கம் வன்முறையை பரப்புவதாக இருந்தால், இந்தியாவை வலிமையாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகளாவிய சவாலை திறம்பட எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரமும் வலுவாக இருக்கிறது. மோடி அரசை மக்கள் ஆதரிக்கின்றனர்’’ என்றார்.

Related Stories: