* திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கும் தவெக அரசு, திமுக ஈர்த்த தொழில் துறை முதலீடுகளை கைவிட்டது ஏன்?
* தமிழகத்தில் தொடர்ந்து பறிபோகும் தொழில்துறை முதலீடுகள்
* அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்கும் தொழில் நிறுவனங்கள்
* ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிகொடுத்த தவெக அரசு
* கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அமைச்சர் கீர்த்தனா
சென்னை: ஏற்கனவே ரூ.1500 கோடி மதிப்பிலான போர் விமான உற்பத்தி திட்டம் ஆந்திரா சென்ற நிலையில், தற்போது மேலும் ரூ.2500 கோடியிலான ராயல் என்பீல்டு நிறுவனமும் ஆந்திரா சென்றிருப்பது தமிழகத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தக் கூட தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழல், புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளதாகப் பேச்சுக்கள் எழுகின்றன. தற்போதைய தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா இருக்கிறார்.
திமுக ஆட்சியில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் இந்தியாவிலேயே முதலில் தேர்ந்தெடுக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது ‘முதலீட்டாளர்களின் நம்பிக்கை மாநிலம்’ என்ற முகவரிக்கு சவால்கள் எழத் தொடங்கியுள்ளன. தவெக அரசு பதவி ஏற்ற நேரத்தில் ஓசூரில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு அனைத்துப் பணிகள் முடிந்தநிலையில், ரூ.1500 கோடி மதிப்பிலான போர் விமான உற்பத்தி திட்டம் ஆந்திராவுக்கு சென்றது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. இது குறித்து புதிய தவெக அரசு கண்டுகொள்ளவில்லை.
இது ஒருபுறம் இருக்க தற்போது 2வது பெரிய தொழிற்சாலை திட்டமும் ஆந்திராவுக்கு சென்று விட்டது. இருசக்கர வாகன உற்பத்தியில் உலகளவில் தனித்த அடையாளம் பெற்றுள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அடுத்த கட்ட பெரிய முதலீட்டை தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்றியிருப்பது, அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி அருகிலுள்ள தாடா பகுதியில் புதிய கிரீன்பீல்டு உற்பத்தி ஆலையை அமைக்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.2500 கோடி மதிப்பிலான இந்த முதலீடு பல கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.
நிறுவனத்தின் எதிர்கால சந்தைத் தேவைகள் மற்றும் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் இயங்கி வரும் ராயல் என்பீல்டு ஆலையை விரிவுபடுத்த ரூ.958 கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விரிவாக்கம் நிறைவேற்றப்பட்டால், நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 20 லட்சம் இருசக்கர வாகனங்களாக உயருமென எதிர்பார்க்கப்பட்டது. தற்போது உள்ள உற்பத்தித் திறன் 14.6 லட்சம் யூனிட்களாக இருந்து, அது முழு பயன்பாட்டை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது 2வது நிறுவனமான சுமார் ரூ.2500 கோடியிலான பெரிய முதலீடு தமிழ்நாட்டிற்கு வராமல் ஆந்திராவிற்கு சென்றுள்ளது. ‘தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி மாநிலம்’ என்ற தமிழ்நாட்டின் நிலை தற்போது பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின்னர், முதலீட்டாளர்களிடையே ஒரு வகையான காத்திருப்பு மனநிலை உருவாகியுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, கொள்கைத் தெளிவு, நிர்வாகத் தொடர்ச்சி, அனுமதி நடைமுறைகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பு போன்ற அம்சங்களில் திமுக ஆட்சி காலத்தில் இருந்த உறுதி தற்போது குறைந்துள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திமுக ஆட்சிக் காலத்தில், கொரோனா போன்ற கடினமான சூழ்நிலையிலும் தமிழகத்தை தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலமாக முன்னிறுத்த பல உலகளாவிய முதலீட்டு மாநாடுகள், துரித அனுமதி திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் விளைவாக மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னிலை பெற்றது. ஆனால் தற்போது, புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நிர்வாகத்தின் செயல்திறன் எப்படி இருக்கும் என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில நிறுவனங்கள் தமிழக அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குக் கூட முன்வராமல் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ராயல் என்பீல்டின் புதிய ஆந்திரா திட்டம் மூலம் சுமார் 15,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்படுகிறது. அந்த வாய்ப்பு தமிழ்நாட்டிலிருந்து நழுவிச் சென்றுள்ளது. இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பும், சுமார் ரூ.1500 கோடி மதிப்பிலான போர் விமான உற்பத்தி தொடர்பான திட்டம் ஓசூரிலிருந்து ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான புதிய அரசு மாற்றம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது தொழில்துறை முதலீடுகள் வெளியேறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற முக்கிய அம்சங்களில் அரசு தெளிவான திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரிசையாக தொழில் நிறுவனங்கள் ஆந்திரா செல்வதை தடுப்பதற்கான வழிகளை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு எந்த அளவுக்கு தீவிரமாக செயல்படுகிறது என்ற கேள்விகள் எழுகின்றன.
