ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் மாவட்ட நகரங்களில் அமைதி பேரணி: செல்வபெருந்தகை அறிவிப்பு

 

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தமிழ்த் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜீவ்காந்தி. ஆனால், 1991ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வந்த அவரை ஸ்ரீபெரும்புதூரில் பெண் மனித வெடிகுண்டின் மூலம் கோரமாக படுகொலை செய்தனர். அந்தவகையில் அவரது 35ம் ஆண்டு நினைவுநாளில் சபதம் ஏற்போம். எந்த பயங்கரவாதத்திற்கு ராஜீவ்காந்தி பலியாக்கப்பட்டாரோ அந்த பயங்கரவாதத்தை முறியடிக்க ஓரணியில் திரண்டு சூளுரை ஏற்க வேண்டிய நாளே மே 21.

எனவே, அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ராஜீவ் காந்தியின் படத்தை வாகனத்தில் பொருத்தி மலர்களால் அலங்கரித்து மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் வழியாக நினைவுப் பேரணி நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அன்றைய தினம் காலை 9 மணி முதல் பெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் நானும், மற்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்களும் காங்கிரஸ் கட்சியினரோடு பங்கேற்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். எனவே, காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: