திருவாரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்; தனியார் டிவி நிருபருக்கு சரமாரி பீர்பாட்டில் குத்து; கஞ்சா போதையில் 3 பேர் கும்பல் வெறி

 

முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே நள்ளிரவில் தனியார் தொலைக்காட்சி நிருபரை பீர் பாட்டிலால் சரமாரி குத்தி 3 பேர் கஞ்சா போதையில் வெறிச்செயலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38). இவரது மனைவி பர்ஹானா. இவர்களுக்கு 3 வயது, 2 மாதத்தில் 2 மகன்கள் உள்ளனர். ஹாஜா முகைதீன் தனியார் தொலைக்காட்சியில் முத்துப்பேட்டை ஏரியா செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அவர் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11.45 மணியளவில் முத்துப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த அப்துல் பாசித் (20) மற்றும் அவரது நண்பர்கள் சபீர் அஹமது (21), அப்பாஸ் (21) ஆகியோர் கஞ்சா போதையில் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவை தட்டினர்.

சத்தம் கேட்டு மாமியார் முருகாயி (58) எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது நிருபர் ஹாஜா மைதீனிடம் பேச வேண்டும் என்று அந்த கும்பல் கூறியது. இதையடுத்து அவர் எழுந்து வந்து வீட்டு வாசலில் நின்று என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது அப்துல் பாசித், தன்னை கோவிலூரை சேர்ந்த ஒருவர் தாக்கி விட்டார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். புகாரை போலீசார் ஏற்கவில்லை. நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து வீட்டுக்கு வெளியே வந்த ஹாஜா முகைதீன், அந்த கும்பலிடம் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ஹாஜா முகைதீன் தலையில் அப்துல் பாசித் தாக்கினார். இதில் அந்த பாட்டில் உடைந்தது.

இதையடுத்து உடைந்த பாட்டிலால் ஹாஜா முகைதீன் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். மேலும் அவரது செல்போனை பிடுங்கினர். ஹாஜா முகைதீன் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் தப்பினர். படுகாயமடைந்த ஹாஜா முகைதீனை பொதுமக்கள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, கஞ்சா போதை தொடர்பாக அப்துல் பாசித் குறித்த செய்தியை சேகரித்து டிவிக்கு கொடுத்ததால் ஹாஜா முகைதீனை தாக்கினரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நிருபரை கஞ்சா கும்பல் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

போலீஸ் குற்றச்சாட்டு: மறுக்கும் நிருபர்
திருவாரூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஹாஜா முகைதீனை தாக்கிய அப்துல் பாசித் நண்பர் அப்பாஸ் என்பவரது உறவுக்கார பெண்ணான அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஒருவருடன் ஹாஜா முகைதீன் தொடர்பு வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், இது தொடர்பாக அப்பாஸின் நண்பர்கள் அப்துல் பாசித் மற்றும் சபீர் அஹமது ஆகியோர் ஹாஜா முகைதீன் வீட்டிற்கு சென்று கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்துல் பாசித், ஹாஜாமைதீனை பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் 3 பேர் கஞ்சா போதையில் வந்து தான் நிருபரை தாக்கியுள்ளனர் என்பது தவறானது.

இந்த சம்பவத்தில் அப்துல் பாசித் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹாஜா முகைதீன் கூறும்போது, ‘‘காவல்துறை தரப்பில் என் மீது குற்றம் இருப்பதாக கூறி ஒரு உண்மைக்கு மாறான தகவலை கூறியதை கண்டு வேதனை அடைகிறேன். அது முற்றிலும் பொய். நான் சொல்வது தான் உண்மையான தகவல். சம்பந்தப்பட்ட 3 இளைஞர்களும் கஞ்சா போதையில் வந்து தான் என்னை தாக்கினர். இதில் அப்துல் பாசித் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர்’’ என்றார்.

Related Stories: