சென்னை: காரீப் பருவத்திற்குத் தேவையான உரங்களை தங்கு தடையின்றி தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது: காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தருணத்தில், உரப்பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். நடப்பு காரீப் பருவத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 லட்சம் ஹெக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது.
பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர்வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனை நிறைவு செய்திட 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
