இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த காவலர்கள் அதிரடி கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூர் மண்டலத்தை சேர்ந்த செல்வம், லக்ஷ்மன் குமார் மற்றும் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சேர்ந்த இளங்கோவன் இருவரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பயிரளி கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி மஞ்சுநாத்திடம் கங்காதர நல்லூருக்கு வந்தால் குறைந்த விலைக்கு இளநீர் வாங்கி தருவதாக கூறி நம்ப வைத்துள்ளனர். இதனால் மஞ்சுநாத் ரூ.10 லட்சம் பணத்தோடு கடந்த சனிக்கிழமை மாலை இளநீர் வாங்க சென்றுள்ளார்.

இந்த கும்பல் தங்களுக்கு அறிமுகமான சித்தூரை சேர்ந்த போக்குவரத்து காவல் நிலைய எஸ்.ஐ லோகநாதன் மற்றும் ஆயுதபடை காவலர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களின் ஆலோசனைபடி மஞ்சுநாத் சனிக்கிழமை மாலை பணத்தோடு கங்காதர நல்லூர் மண்டலம் அருகே இந்த கும்பலை சேர்ந்த மூவரும் மஞ்சுநாத்துடன் பேசி கொண்டிருந்த நிலையில் கங்காதர நல்லூரை சேர்ந்த எஸ்.ஐ லோகநாதன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

கள்ள நோட்டுகளை கை மாற்றுவதாக தகவல் கிடைத்தது எனக் கூறி மஞ்சுநாத் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் தொலைபேசியை பறித்து கொண்டு அவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத் கங்காதர நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் பிரசாத் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவுடன் மஞ்சுநாத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பவ இடத்திலுருந்து வந்த லோகநாதன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை கண்டு மஞ்சுநாத் அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து காவல் ஆய்வாளர் பிரசாத் அவர்களை கைது செய்தார். சில மணிநேரம் கழித்து செல்வம், லக்ஷ்மன் குமார் மற்றும் இளங்கோவன் ஆகியோரை பிடித்து ரூ.9 லட்சம் பணம் மீட்கப்பட்டது. இந்த 5 பேரும் சித்தூரில் உள்ள நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப் பட்டனர்.

Related Stories: