திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் முழுநேர ஆர்.டி.ஓ அதிகாரி நியமிக்கப்படாததால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருநெல்வேலி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆர்.டி.ஓ அதிகாரி பணி ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த சில வாரங்களாக புதிய அதிகாரி நியமிக்கப்படவில்லை.
தற்போது சங்கரன்கோவிலில் இருந்து கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகதிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் நூற்றுகணக்கான வாகனங்களின் கோப்புகள் சரிபார்க்கப்படாமல் அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அலுவலகத்தில் தற்போதைய நிலவரப்படி பதவியில் இருக்கும் ஒரே ஒரு பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் மட்டுமே ஒட்டுமொத்த பணிகளையும் கவனித்து வருகிறார். எனவே இது பொது மக்களின் காத்திருப்பு நேரத்தை அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையதளமான சாரதி மற்றும் வாகன பரிவாகன் ஆகியவற்றில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன.
புதிய ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிமம் புதுப்பிக்கும் பணிகள் தேங்கியுள்ளன. வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் போன்ற அத்தியாவசியப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிகாக வாங்கப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியாமல் பொது மக்கள் முடங்கியுள்ளனர்.
இதற்கெல்லாம் மேலாக போக்குவரத்து விதி மீறல் மற்றும் விபத்து வழக்குகள் தொடர்பான நீதிமன்ற ஆவண நடைமுறைகளும் இதனால் தாமதமாகி வருகின்றன. எனவே முழுநேர ஆர்.டி.ஓ அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
