வீட்டை அபகரிக்க மருமகள் முயற்சி; மாமனார் தர்ணா போராட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: மகன் வாங்கிய கடன் பிரச்னையில் தனது வீட்டை அபகரிக்க மருமகள் முயற்சிப்பதாக கூறி மாமனார் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அண்ணாநகர் பகுதி சேர்ந்தவர் கந்தசாமி (75). நெசவாளியான இவர், தனது மனைவி பானுமதி (70) என்பவருடன் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கவேண்டும் என கூறியுள்ளார். மனுவில், ‘எங்கள் மகன் பரந்தாமன் (38)க்கு பானுப்பிரியா (36) என்ற பெண்ணை 2019ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தோம். அவர்கள் சென்னை அருகேயுள்ள நன்மங்கலம் பகுதியில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் பானுப்பிரியா, எங்களது மகன் கடன் வாங்கிய வகையில் 17 லட்சம் மற்றும் வட்டியாக 2 லட்சம் ரூபாய் என 19 லட்சம் ரூபாயை கேட்டு மகனை துன்புறுத்தி வருகிறார். இதனால் பரந்தாமன் தற்கொலைக்கு முயற்சி செய்தான். அவனை மருத்துவமனைக்கு அழைத்து காப்பாற்றினோம். இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவன்போல் மாறிவிட்டான். கடன் பணத்திற்கு ஈடாக எங்களுடைய வீட்டை எழுதி வாங்க மருமகள் பானுப்பிரியாவின் தூண்டுதலின்பேரில் சதீஷ்குமார் மற்றும் முத்து, செந்தில்குமார், சரண்யா உள்ளிட்ட சிலர் வீட்டின் மீது வழக்கு போட்டு அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விஷ்ணு காஞ்சிகாவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அன்றிலிருந்து போராடி வருகிறோம். அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. முதுமை மற்றும் வறுமை காரணமாக போராட முடியாத நிலையில் இருந்து வருகிறோம். எனவே, மகனையும் சொத்தையும் மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’என கூறினர்.

இதற்கு போலீஸ் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாசல் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முதியவர் கந்தசாமியை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். முதியவரின் தர்ணா போராட்டத்தால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: