ரியாத்: ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் 2 கால்பந்து இறுதிப் போட்டியில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியை வீழ்த்தி, காம்பா ஒஸாகா அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் 2 கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டி ரியாத் நகரில் நடந்தது.
அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும், ஜப்பானை சேர்ந்த காம்பா ஒஸாகா அணியும் மோதின. துவக்கம் முதல் இரு தரப்பு வீரர்களும் கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். போட்டியின் 29வது நிமிடத்தில் காம்பா ஒஸாகா அணி வீரர் டெனிஸ் ஹெம்மெட், அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று நேர்த்தியாக கோலடித்து அசத்தினார். அதன் பின் இரு அணி வீரர்களும் கடுமையாக முயன்றும் கோல் போட முடியவில்லை.
அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் காம்பா ஒஸாகா அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கால்பந்து உலகில் ஜாம்பவானாக திகழும் ரொனால்டோ தலைமையில் மோதிய அல் நஸர் அணி, இந்தாண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வெறுங் கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஏஎப்சி சாம்பியன்ஸ் கால்பந்து கோப்பையை வெல்லும் முதல் ஜப்பானிய அணியாக, காம்பா ஒஸாகா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
