சென்னை: தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நேற்று, கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா இணை அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடந்து வந்தன.
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் பட்டியலில் முதல் நிலையில் உள்ள தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா இணை, 2ம் இடத்தில் உள்ள அபய் சிங், ராதிகா சீலன் இணையுடன் மோதியது. இப்போட்டியில் வேலவன், ஜோஷ்னா இணை சிறப்பாக ஆடி, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
முன்னதாக ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வேலவன் செந்தில்குமார், அபய் சிங் இணை, 11-8, 11-5 என்ற நேர் செட்களில் ராகுல் பைதா, சூரஜ் குமார் சந்த் இணையை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, ராதிகா சீலன் இணை, 11-8, 11-4 என்ற நேர் செட்களில் ஜேனட் விதி, பூஜா ஆர்த்தி இணையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
