பஞ்சாபை பந்தாடிய பெங்களூரு

 

தர்மசாலா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 61வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. அதில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீசியது. அதையடுத்து பெங்களூரு அணியின் விராட் கோஹ்லி, ஜேகப் பெத்தெல் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஹர்பிரித் பிரார் வீசிய 3வது ஓவரில் பெத்தெல் (11 ரன்) ஆட்டமிநழ்தார். அதையடுத்து, தேவ்தத் படிக்கல் களம்புகுந்தார். இருவரும் சிறப்பாக ஆடி, 76 ரன்கள் குவித்த நிலையில், ஹர்பிரித் பிரார் வீசிய 10வது ஓவரில் படிக்கல் (45 ரன்) அவுட்டானார். அதன் பின், கோஹ்லி, அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அட்டகாசமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

யுஸ்வேந்திர சஹல் வீசிய 15வது ஓவரில் கோஹ்லி (37 பந்து, 58 ரன்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 4 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 73 ரன் எடுத்து களத்தில் இருந்தார். அதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா ரன் எடுக்காமலும், பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னிலும் அவுட்டாகி மோசமான துவக்கம் தந்தனர்.

பின் வந்தோரில், கூப்பர் கனோலி 37, சூர்யன்ஸ் ஷெட்கே 35, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 37, சஷாங்க் சிங் 56 ரன் எடுத்தனர். 20 ஓவரில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன் மட்டுமே எடுத்தது. அதனால், 23 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

Related Stories: