மூதாட்டியிடம் செயின் பறித்த 2 வாலிபர்களுக்கு தலா ஓராண்டு சிறை

திருச்சி, மே6: திருச்சி ஜீயபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கம்பரசம் பேட்டையை சேர்ந்தவர் பானுமதி (69). இவர் கடந்த 28.9.2020 அன்று தன் வீட்டின் முன்பு குப்பை கொட்டுவதற்காக சென்றார். அப்போது டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் பானுமதி அணிந்திருந்த 4 பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, திருச்சி உறையூர் பாண்டமங்கலம் செட்டித்தெருவை சேர்ந்த திருப்பதி (28) மற்றும் பாண்டமங்கலம் காவல்காரர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.3ல் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து மாஜிஸ்திரேட் முகமது சுஹைல் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வக்கீல் வெங்கடேசன் ஆஜரானார்.

 

 

Related Stories: