* தன்னிச்சையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் நேரில் அழைத்து கண்டிப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தவெக வெற்றி பெற்றதால், காவல்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக தவெக தலைவர் விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு முழுமையாக அளித்துள்ளனர். தனிப்பெரும்பான்மை இல்லா விஜய்க்கு எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் நேரில் அழைத்து கடிந்து கொண்டதால் அவசர அவசரமாக நேற்று நள்ளிரவு தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவல்துறை சார்பில் வாபஸ் பெற்றப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4ம் தேதி வெளியானது. அதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக முதலிடத்திலும், திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், அதில் காங்கிரஸ் 5, விசிக 2, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2, தேமுதிக 1 அடங்கும். 53 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி ெபற்று 3வது இடத்தில் உள்ளது. தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றதால் தவெக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக சட்டப்பேரவையை வழிநடத்த 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. ஆனால் தவெகவிடம் 108 மட்டும் உள்ளது.
இதனால் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டு முறையாக கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் படி திமுக கூட்டணியில் கடந்த 20 ஆண்டுகளாக பயணித்து வந்த காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தங்களது 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்ட ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து கொடுத்து, தவெக கூட்டணியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தவெக ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 113ஆக உயர்ந்தது.
இப்பவும் இன்றும் தவெக தலைவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அதில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது தான் எண்ணிக்கையில் இடம் பெறும் என்பதால் பெரும்பான்மை பலத்துக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டது. இதற்கிடையே தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் நேற்று மாலை தமிழக சட்டப்பேரவையை வழிநடத்த உரிமை கோரி தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து உரிமை கோரும் கடிதத்தை நேரில் வழங்கினார். அதேநேரம் தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்கும் வகையில் முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக சட்டப்பேரவையை வழிநடத்துவதற்கான 118 எம்எல்ஏக்கள் அடங்கிய ஆதரவு கடிதத்தை கொடுத்தால் மட்டும் முதலமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறினர். இருந்தாலும், நேற்று இரவு தவெக தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜூனா தமிழக ஆளுநரை தனியாக சந்தித்து தங்களது ஆதரவு குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரம், கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநருக்கு முறையாக அனுப்பி வைத்தார். ஆனால் தமிழக ஆளுநர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய ராஜினா கடித்தை ஏற்று கொண்டார். அதேநேரம், தமிழகத்தில் புதிய முதலமைச்சர் பதவி ஏற்கும் வகையில், நீங்கள் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும், முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் தொடரும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும்,தமிழக ஆளுநர் நேற்று 16 வது சட்டமன்றத்தை கலைத்து அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.
நிலைமை இப்படி இருக்க, சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்றதால், அடுத்த முதல்வர் விஜய் தான் என தமிழக காவல்துறை அதிகாரிகள் ஆளுநர் மற்றும் உள்துறை செயலாளர் ஆலோசனைகள் இன்றி தன்னிச்சையாக தமிழக முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பும் திரும்ப பெற்றனர். அதோடு இல்லாமல், தமிழக முதல்வர் தவெக தலைவர் விஜய் தான் என்று முடிவு செய்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு முதலமைச்சருக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் மாற்றப்பட்டது. குறிப்பாக வெடி குண்டு கண்டு பிடிக்கும் கருவிகள், உள்துறையின் பாதுகாப்பு தொடர்பான சாதனங்கள், முதல்வருக்கான பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அனைத்தும் தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
பின்னர் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேற்று இரவு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் காவல் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து, யார் உத்தரவுப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப ெபற்றது. தவெக தலைவர் விஜய்க்கு எப்படி முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பும், கான்வாயும் வழங்கப்பட்டது என்று கேள்விகள் கேட்டார். ேமலும், தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகாரியாக வேலூர் சரகத்தில் பணியாற்றிய டிஐஜி தர்மராஜன் யார் ஆலோசனைப்படி விஜய்க்கான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது உள்துறை செயலாளருக்கு தெரியுமா, தமிழ்நாடு உளவுத்துறைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த அரவிந்த், அரியலூர் எஸ்பியாக இருந்த பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ஆகியோர் சிறப்பு அதிகாரியாக நியமித்தது ஏன், அவர்களை உடனே அந்த பணிகளில் இருந்து விடுவித்து, அவர்கள் பணியாற்றிய பழைய பணிகளில் தொடர வேண்டும் என்று ஆளுநர் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதைதொடர்ந்து முதலமைச்சருக்கான பாதுகாப்பு அதிகாரியாக பணி அமர்த்தப்பட்ட டிஐஜி தர்மராஜன், உளவுத்துறை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட எஸ்பிக்கள் அரவிந்த், பாலசுப்பிரமணியன் சாஸ்திரி ஆகியோர் நேற்று முன்தினம் டிஜிபி உத்தரவுப்படி புதிய பணிக்கு சேர்ந்தனர். ஆனால் ஆளுநர் உத்தரவால், 3 ஐபிஎஸ் அதிகாரிகளும் உடனே டிஜிபி திரும்ப பெறப்பட்டது. மேலும், தவெக தலைவர் விஜய்க்கு நீலாங்கரை வீட்டில் வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் தமிழக காவல்துறை அவசர அவசரமாக திரும்ப பெற்றனர். மேலும், பட்டினப்பாக்கத்தில் கட்சி நிர்வாகிளுடன் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க யாரிடம் ஆதரவு கேட்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போதே ஆளுநரின் உத்தரவுப்படி தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பும் மற்றும் கான்வாய் வாகனங்கள் காவல்துறை திரும்ப பெற்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத தவெக தலைவர் விஜய், நேற்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்து அவரது காரில் கான்வாய் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு அவரது பவுன்சர்கள் பாதுகாப்புடன் சென்றார். விஜய் நீலாங்கரை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பு அமைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவியும் காவல்துறை அகற்றி இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் அமைப்பு சட்டத்தை சரியாக புரிந்து ெகாள்ளாமல் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு தன்னிச்சையாக முதலமைச்சருக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் கான் வாய்வழங்கிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
