தற்காலிக சபாநாயகர் தேர்வு குறித்து சட்டப்பேரவை செயலாளருடன் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மை என்பது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.

இதனிடையே தவெக தலைவர் விஜய், வெற்றி பெற்ற தனது கட்சி வேட்பாளர்களை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ெதாடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தவெக எடுத்து வருகிறது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று காலை 11.30 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இதையொட்டி, தற்காலிக சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனை நேற்று காலை தலைமை செயலகத்தில் தவெக எம்எல்ஏ செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதிய அரசு பொறுப்பேற்றதும், தேர்வான எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க தற்காலிக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: