தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு: முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்

 

சென்னை: தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் இன்று திடீரென சந்தித்து பேசினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது. வலுவான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் ெவற்றி பெற்ற காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இது கூட்டணிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கட்சியினருடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்ைம செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இன்று காலை ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் திமுக சட்டப்பேரவை கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ெப.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் இன்று பிற்பகலில் திடீரென சந்தித்து பேசினர். விஜய் ஆதரவு கேட்டது குறித்து மு.க.ஸ்டாலினுடன் 3 தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அவரது கோரிக்கையை ஆளுநர் ஏற்காதது குறித்தும் சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: