சைலன்ட் மோட்-ல் விசில்.!! இதுவே திமுக-வாக இருந்தா சீனே வேற..தவெக-விற்கு ஆளூர் ஷா நவாஸ் சுளீர் கேள்வி..

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட ஆட்சி அமைக்க முடியாமல் போராடி வருகிறது விஜய்யின் தவெக. பெரும்பான்மை இடங்களை பெறாத சூழலில், ஆட்சியமைக்க ஆதரவு கோரி நாலாபக்கமும் பல கட்சிகளுக்கு தூது விட்டது விஜய் தரப்பு. இந்த வலையில் ஒருவழியாக காங்கிரஸ் சிக்கியது.

திமுக கூட்டணியை நம்பி ஓட்டளித்த மக்களுக்கும், கூட்டணியை அரவணைத்து தேர்தலை சந்தித்த திமுக-விற்கும் பச்சை துரோகம் செய்து விட்டு விஜய் பக்கம் சென்று பல்லிளித்தது காங்கிரஸ். அடுத்தடுத்து திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடமே ஆதரவு கேட்டு வலை விரித்து காத்திருக்கிறது தவெக. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பிறகும் கூட ஆளுநர் தவெக-வை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு எம்எல்ஏ எண்ணிக்கைகளை காட்டிவிட்டு தாராளமாக முதல்வர் பதவி ஏற்று கொள்ளுங்கள், ஆட்சியை அமையுங்கள் என்று சொல்லிவிட்டது ராஜ்பவன்.

இந்த சூழலிலும் கூட ஆளுநரை எதிர்த்து ஒருகேள்வி கூட கேக்காமல் அமைதி காக்கிறது தவெக, ஆனால் நேற்று தவெக-வுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் ஆளுநரின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்து விஜய் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தவெக-வின் விசில் தேர்தலுக்கு முன்பு மட்டும் தான் சத்தம் போடும் போல, தனக்கே நெருக்கடி வரும் போது கூட விசிலை வைத்து சத்தம் போடாமல் தூக்கி பாக்கெட்டில் வைத்திருக்கிறது விஜய் தரப்பு. இந்த நிலையில் தான் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற தனது வலையில் விழும் என்று காத்திருக்கும் விசிக-விலிருந்தே விஜய்க்கு நேரடியாக நெத்தியடி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

“தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்..? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். ஆளுநரை எதிர்க்கும் கொள்கை உறுதியும் துணிவும் விஜய்யிடம் உள்ளதா” என்று விசிக-வின் முக்கிய நிர்வாகியான ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: