தனி பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு; விஜயை கைப்பாவையாக மாற்ற பாஜக திட்டம் : விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

 

சென்னை: தவெக தலைவர் விஜயை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் விஜய் ஆதரவு தர வேண்டும் என கடிதம் எழுதியிருப்பது குறித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம். இதற்காக உயர்நிலைக் கூட்டம் கூட்ட இருக்கிறோம். பிஜேபி, மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழ்நாடு அரசியலில் தலையிட்டு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனி பெரும் கட்சியாக தவெக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே அவரை பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். அது தான் அரசியல் அமைப்புச் சட்டம் காட்டும் வழிகாட்டுதல். அவர் ஆதரவு கோரிய நிலையில் இன்னும் ஆளுநர் அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். இங்கே குழப்பம் ஏற்படுத்த இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையது இல்லை. தவெக-விற்கு யார் யார் ஆதரவு தருகிறார்கள் என்ற பட்டியலை ஆளுநர் கோர முடியாது. ஆட்சி அமைக்க அவர் கோருகிறார், ஏனென்றால் அவர் 108 எம்.எல்.ஏ.க்களுடன் பெரிய கட்சியாக இருக்கிறேன் என்று. அப்படி என்றால் அவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அவரிடம் பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டமன்றத்தில்தான் அவர் நிரூபிக்க வேண்டும்.

எனவே ஆளுநர் காலம் தாழ்த்துவது பிஜேபி திரைமறைவில் இருந்து தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது இல்லை. எங்களைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் முதல்வராக பதவி ஏற்பது தான் சரி. இதற்கு ஒரு போதும் நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். என்னுடைய கருத்து பிஜேபி தொடக்கத்தில் இருந்து தவெகவை கையாளுகிறது என்பது தான். இது என்னுடைய யூகம். இப்போது பிஜேபி அவரை கையாளத் துடிக்கிறது. அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, அவரை கட்டுக்குள் வைத்திருக்க நெருக்கடியை தருகிறது. இதுவும் என்னுடைய கருத்து.

இப்படி இருக்க விஜய் காங்கிரஸ், இடதுசாரிகள் உடன் பணியாற்றுகிறோம், ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று சொல்வது பரிசீலனை செய்கிறோம். இது குறித்து முன்முடிவை என்னால் சொல்ல முடியாது. எங்கள் முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் நாங்கள் கருத்தியல் ரீதியாக இருப்பவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து எங்கள் முடிவை அறிவிக்க இருக்கிறோம். விஜயை தன்னுடைய கைப்பாவையாக பிஜேபி வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அவரை உடனடியாக பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் பிஜேபி தமிழ்நாடு அரசியலை மேலும் குழப்பப் போகிறார்கள் என்று தான் பொருள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: