ஆட்சி அதிகாரம் எனும் சுகத்திற்காக கூட்டணியை காங்கிரஸ் முறித்துள்ளது: எம்பி தமிழச்சி கடும் கண்டனம்

 

சென்னை: ஆட்சி அதிகாரம் எனும் சுகத்திற்காக கூட்டணியை காங்கிரஸ் முறித்துள்ளது என்று திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் இடம் ெபற்றது. அந்த கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி தவெகவுக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: திமுகவுடனான நீண்ட கால கூட்டணியைச் சந்தர்ப்பவாத நிலையெடுத்து, ஆட்சி அதிகாரம் எனும் சுகத்திற்காக, காங்கிரஸ் கட்சி முறித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை எல்லாக் காலங்களிலும் ஆதரித்து, தோளோடு தோள் நின்று கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியுள்ளது நம் கழகம்.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, அவரது சொந்தக்கட்சியினர் உள்பட மற்றவர்கள் முன்மொழியத் தயங்கிய நேரத்தில், சென்னையிலே ‘இவர் தான் பிரதமர்’ என ஆதரவு தெரிவித்து வாழ்த்தியவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனை அவர்கள் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள். வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: