நாகர்கோவில்: தமிழக அரசியல் களம் பரபரப்பாக ஆகி இருக்கும் வேளையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போவதற்கான அறிகுறிகள் சத்தியமூர்த்தி பவனில் தென்படத் தொடங்கியுள்ளன. தற்போதைய மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தான் வகித்து வரும் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தாமாகவே முன்வந்து விலகிக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் 3 எம்எல்ஏக்கள் குமரி மாவட்டத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர். இந்தநிலையில் கட்சி தலைமை மாற்றம் தொடர்பாக பரவலாக பேச்சு எழ தொடங்கியுள்ளது.
கட்சியின் வளர்ச்சி மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் முடிவை காங்கிரஸ் மேலிடம் தற்போது தீவிரமாக பரிசீலித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸை வழிநடத்தப்போகும் அந்தப் புதிய முகம் யார் என்ற விவாதம் டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள விஜய்வசந்த் எம்.பி-யின் பெயர் மாநிலத் தலைவர் பதவிக்கு பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மறைந்த முன்னாள் எம்.பி மற்றும் வசந்தகுமாரின் அரசியல் வாரிசாக களம் புகுந்த விஜய்வசந்த், தந்தையை போலவே தொண்டர்களுடன் எளிமையாகப் பழகும் பண்பும், கன்னியாகுமரி போன்ற ஒரு முக்கியமான கோட்டையை தனது வசமே தக்கவைத்து கொண்ட திறமையும் கொண்டவர். 2021 இடைத்தேர்தல் மற்றும் 2024 பொதுத்தேர்தல் என இரண்டு முறை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தனது அரசியல் ஆளுமையை அவர் மேலிடத்திற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார். ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் விஜய்வசந்த், தமிழகத்தில் இளைஞர்களை கவர்ந்து கட்சியைபலப்படுத்த சரியான தேர்வாக இருப்பார் என டெல்லி தலைமை கருதுகிறது.
மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே வலுவான வாக்கு வங்கியாக திகழும் தென் மாவட்டங்கள், குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்குவதன் மூலம், வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் எழுச்சியுடன் செயல்பட முடியும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். செல்வபெருந்தகை ஏற்கனவே தனது விலகல் குறித்த எண்ணத்தை வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பதால், தங்குதடையின்றி ஒரு புதிய தலைவரை நியமிப்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு எந்தச் சிக்கலும் இருக்கப் போவதில்லை.
விஜய்வசந்தின் துடிப்பான செயல்பாடு இணையும்போது கட்சி இன்னும் வலிமை பெறும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் வரை தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் விஜய்வசந்தின் பெயரே பிரதானமாக அடிபட்டு வருகிறது.
எம்.பி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேற்று திடீரென பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகங்களுக்கு அருகே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல்துறை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக நாகர்கோவிலில் உள்ள விஜய்வசந்த் எம்.பி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சி அலுவலகங்களுக்கு திடீரென பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
