தோல்வி எங்களுக்கு புதிதல்ல, காலம் பதில் சொல்லும் வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்தது பச்சை துரோகம்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலடி

சென்னை: வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்தது பச்சை துரோகம், தோல்வி எங்களுக்கு புதிதல்ல, காலம் பதில் சொல்லும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும், நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்ற தோழமையாக உடனிருந்தது திமுக. அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.

குறிப்பாக, சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்த நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களை பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சை துரோகம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பாஜ பல மாநிலங்களில் எதை செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. 2 தேர்தல்களில் ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுக.

தோல்வி எங்களுக்கு புதிதல்ல. துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல. ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஈரம் காயாத ‘கை’யால் நெறிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’: ஆ.ராசா கண்டனம்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நேற்று தனது எக்ஸ் பதிவில், “ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது ‘அரசியல் நெறி’ மட்டுமல்ல, அவசியமான ‘அடிப்படை நாகரீக’மும் தான். வாழ்க ஜனநாயகம்’’ என்று பதிவிட்டுள்ளார். அரசியலில் கூட்டணிக் கொள்கை அல்லது தர்மம் என்பது முக்கியம். ஒரு கட்சிக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய மற்றொரு கட்சிக்கு துரோகம் செய்வது அல்லது மாற்று அணியை ஆதரிப்பது அரசியல் நெறி மரணிப்பதற்குச் சமம். இவ்வாறு ஆ.ராசா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: