தொடர் விடுமுறை எதிரொலி; பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் 4 நாட்களில் 750 பேர் பங்கேற்பு: வனச்சரகர் தகவல்

 

காரமடை: காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு பகுதி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பில்லூர் அணைக்கு மிக அருகாமையில் உள்ளது. காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை எழில் நிறைந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது. சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.

இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம்,பழங்குடியின மக்களின் பாரம்பரியமிக்க 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள்,அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம்,பழங்குடியினர் வாழ்வை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனம் என பல்வேறு வகையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர். பரளிக்காடு, பூச்சமரத்தூர்,பில்லுார், நீராடி உட்பட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் இருந்தும் பரிசல் ஓட்டுநர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் என ஏராளமான பழங்குடியின மக்கள் இந்த சூழல் சுற்றுலாவால் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் நீர்நிலைகளை நாடி செல்கின்றனர். மேலும், சுற்றுலா தலங்களை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனை முன்னிட்டு கடந்த மே 1 ம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை தினந்தோறும் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயங்கும் என காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இடையே போதிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பரளிக்காடு சூழல் சுற்றுலா இயங்கி வந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை வார நாட்களிலும் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த மே 1 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை தினம்தோறும் பரளிக்காடு சூழல் சுற்றுலாவை நடத்த மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறப்பட்டது. இதற்காக ஆன்லைனில் கடந்த ஏப்.30 முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு வருகை தர முன் பதிவு செய்து வந்தனர்.

சுற்றுலாவில் பெரியவர்களுக்கு ரூ.700, 14 வயதிற்கு குறைவான சிறியவர்களுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று தினங்களாக தினம் தோறும் சுமார் 250 பேர் என இதுவரை 750 பேர் வருகை தந்தனர். சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயற்கையை கண்டு மகிழலாம்’’ என தெரிவித்தார்.

Related Stories: