*விரைவில் தீர்வு காணப்படுமா?
நெல்லை : நெல்லை, தென்காசி, தூத்துக்குடி என தென் மாவட்டங்களில் கோடை காலத்தையொட்டி நாளுக்குநாள் ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அவதிப்படும் மக்கள் விரைவில் தீர்வுகாணப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். அத்துடன் ஆவின் விற்பனை செயலி முகவர்களுக்கு அறிமுகப்பட்டுள்ள நிலையில், அதனோடு மல்லுக்கட்டி வரும் முகவர்கள், பண இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் பால் விற்பனை அடிப்படையில் செல்வாக்கு பெற்றிருந்த ஆவின் சமீபகாலமாக மெல்லமெல்ல சரிவை எதிர்கொண்டு வருகிறது. பால் கொள்முதல், அதற்குரிய தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்காமை, விற்பனையில் மந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் ஆவின் செயல்பாடுகள் தேக்கநிலையை எட்டியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை ஆவின் மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து 32 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கென நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 150க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மத்திய பால் பண்ணைக்கு கொண்டு வரப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, 250 மிலி, 500 மிலி, ஒரு லிட்டர் என பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, நிலைப்படுத்திய பால், இதர சத்துக்கள் அடங்கிய பால், நிறை ெகாழுப்பு பால் என 3 விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோடை காலத்தையொட்டி நெல்லை ஆவினுக்கு பால் வரத்து சுமார் 13 ஆயிரம் லிட்டர் வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பால் விற்பனையும் சரிந்துள்ளது. பால் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அதிகாரிகள், முகவர்கள் மத்தியில் ஆவின் விற்பனை செயலி முறையை தற்போது நடைமுறைப்படுத்தி, அவர்களையும் சிரமப்படுத்தி வருகின்றனர்.
நெல்லை ஆவினைப் பொருத்தவரை நுகர்வோருக்கு பால் சப்ளை செய்ய சுமார் 300 முகவர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது ஆவின் விற்பனை செயலியை கையில் எடுத்துக்கொண்டு மறுநாள் தங்களுக்கு வேண்டிய பால் பாக்கெட்டுகள் எத்தனை, பாக்கெட்டுகளின் நிறங்கள் ஆகியவற்றை வரிசைப்படுத்தி முதல் நாள் பிற்பகல் 2 மணிக்குள் சொல்லியாக வேண்டும். அதற்கான தொகையையும் முன்கூட்டியே செயலி மூலம் அதாவது முதல்நாள் மதியம் 2 மணிக்குள் செலுத்திட வேண்டும்.
குறிப்பாக வயலட் கலர் பாக்கெட்டுகள், ப்ளூ கலர் பாக்கெட்டுகள் எத்தனை மற்றும் எத்தனை மி.லி லிட்டர் வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் இரவுக்குள் முகவர்களுக்கு வரும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் கொழுப்பு சத்து குறித்தான நிற வகைப்பாடுகள் அவர்களுக்கு செயலி மூலம் தெரிவிக்கப்படும்.
இதில் முகவர்கள் 200 லிட்டர் ஆர்டர் செய்தால், மறுதினம் 700 முதல் 80 லிட்டர் பால் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் முகவர்கள் நுகர்வோர்களுக்கு தேவைக்கு ஏற்ப பால் கொடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
பணத்தை முந்தைய தினமே செலுத்திவிடும் முகவர்கள், மறுநாள் குறைவாக சப்ளை செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்காக, மீதமுள்ள கட்டணத்தையும் உடனே பெற முடிவதில்லை. அவற்றை ஒரு மாதம் கழித்து வாங்கி கொள்ளும்படி ஆவின் நிர்வாகம் தெரிவிக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.300 வரை கூடுதல் பணம் செலுத்தும் முகவர்கள், அவற்றை ஆவின் நிர்வாகத்திடம் மீட்க போராட்டம் நடத்த வேண்டியதுள்ளது.
இதுகுறித்து ஆவின் முகவர்கள் கூறுகையில் ‘‘ஆவின் நிர்வாகம் பால் விற்பனையை ஊக்குவிக்க எவ்வித நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. தனியார் பால் விற்பனையாளர்கள், வாரம் தோறும் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகையை கொடுத்து, பாலை கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் ஆவின் நிர்வாகம் உற்பத்தியாளர்களுக்கு 3 மாதம் வரை பாக்கி வைத்து வருகிறது. தற்போது முகவர்களுக்கு ஆவின் விற்பனை செயலியை அறிமுகம் செய்து, எங்களிடம் இருந்தும் பணத்தை சுரண்ட தொடங்கியுள்ளது. ஆவின் பூத்துகளில் விற்பனைக்கு தகுந்தாற்போல் பால் வந்து சேருவதில்லை. எங்களிடம் முன்கூட்டியே பணத்தை பிடித்து கொண்டு, அதை மறுதினமே திருப்பி தருவதும் இல்லை’’ என்றனர்.
அட்டைதாரர்களும் அவதி
நெல்லை ஆவினைப் பொருத்தவரை சமீபகாலமாக நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு கலர் பாக்கெட் பால் ஏற்கனவே நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஆவின் அட்டைதாரர்களையும் ஆவின் அடிக்கடி பாடாய் படுத்தி வருகிறது. அட்டைதாரர்களை பொறுத்தவரை அவர்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.1.50 குறைவாக கொடுக்கின்றனர்.
ஆனால் மாதம்தோறும் அவர்கள் முன்கூட்டியே பணத்தை கட்டிவிட வேண்டும். இந்நிலையில் ஆவின் நிர்வாகம் அட்டைதாரர்கள் ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை சமர்பித்து, ஆவின் கூப்பனை நிரப்பி தர வேண்டும் என அடிக்கடி கேட்டு கொள்கிறது. இதனால் ஆவின் அட்டைதாரர்களும் நொந்து நூலாகின்றனர்.
