*ஏரிகளும் வறண்டதால் பயிர் சாகுபடி பாதிப்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில் மற்றும் மழை பொய்த்து போனதால், 8 அணைகளில் நீர்மட்டம் சரிந்து, குட்டையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, பயிர் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.
ஆண்டுதோறும் பருவமழை பெய்தால் மட்டுமே விவசாயப் பணிகள் செழிப்பாக நடக்கும். பருவமழை பொய்த்து போனால் விவசாய பணிகள் முடங்கி, வெளிமாநிலத்திற்கு கூலிவேலைக்கு செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு, போதுமான அளவு பருவமழை பெய்யவில்லை. நடப்பாண்டிலும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மழை பெய்யாததால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லை. தற்போது அணைகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள ஏரிகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு குட்டையாக மாறியுள்ளன. இதனால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு, தொப்பையாறு, நாகாவதி, தும்பல அள்ளி, கேசர்குழி, ஈச்சம்பாடி உள்ளிட்ட 8 அணைகள் உள்ளன. இதுதவிர, 74 பொதுப்பணித்துறை ஏரிகளும், 624 ஏரி, குளங்களும் உள்ளன. நூற்றுக்கணக்கான தடுப்பணைகளும் உள்ளன. இவை அனைத்துமே தற்போது நீரின்றி வறண்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை போதிய அளவில் பெய்யாததால், சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. வறட்சியால் நிலக்கடலை, சாமை, ராகி, தக்காளி, கத்திரி, பீர்க்கங்காய் மற்றும் தீவனப்பயிர்கள், மாமரங்களில் மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி, ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர் வனப்பகுதிகளில், கடும் வெப்பத்துடன் கூடிய வெயில் கொளுத்தி வருகிறது.
வனப்பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து அனல் காற்று வீசுகிறது. ஒகேனக்கல் மலைப்பகுதியில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து விட்டன. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனப்பகுதி வறட்சி பிடியில் சிக்கியுள்ளது.
வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக, யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி நீர்நிலைகளை நோக்கி செல்கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு சராசரியை விட குறைவாக மழை பெய்தது. பருவமழை பொய்த்ததால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 அணைகளிலும் தண்ணீர் குறைந்து, குட்டையாக காட்சியளிக்கிறது. அதே போல், ஏரிகளிலும் தண்ணீர் இல்லை.
கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளை பாதுகாக்க போராட வேண்டிய நிலை உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. எனவே, தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், `தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 942 மில்லி மீட்டர். இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் 2.92 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு 2,03,030 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வரை, 1,59,123 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. இதனால் 8 அணைகளிலும் இருப்பு சரிந்து விட்டது. இருந்த தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தி, குடிநீர் கிடைக்காத இடத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.
