திருவனந்தபுரம்: நடை சாத்திய பின்னர் சபரிமலை காட்சிகளை படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்திருக்கும் நாட்களில் மட்டுமே பம்பையில் இருந்து சபரிமலை செல்ல அனுமதி உண்டு. நடை சாத்தப்பட்டால் அதன் பின்னர் சபரிமலை செல்ல போலீசார் மற்றும் அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு யூடியூப் சேனலில் ‘நடை சாத்தப்பட்ட பின்னர் சபரிமலை காட்சிகள்’ என்ற பெயரில் ஒரு வீடியோ ஒளிபரப்பானது.
பம்பை முதல் சன்னிதானம் வரை எடுக்கப்பட்ட காட்சிகள் இதில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் 18ம் படி, கோயில் கொடிமரம் ஆகிய காட்சிகள் இதில் இருந்தன. இதுகுறித்து அறிந்த பம்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. சபரிமலை வீடியோ ஒளிபரப்பான யூடியூப் சேனலை செங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நடத்தி வருகிறார் என விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
