திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்: 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்; கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரமாக காத்திருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது, ஆண்டு முழுவதும் கிரிவலம் சென்ற நிறைவை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சித்ரா பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி இந்தாண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 9.52 மணிக்கு தொடங்கி, இன்று இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர். இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று மே தினம், நாளை சனி நாளை மறுதினம் ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதனால் கிரிவலபாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பியது. கிரிவலம் வந்த பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் உட்பிரகாரம் முதல் வெளிபிரகாரம் மற்றும் மாடவீதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆனது. நேற்றிரவு முதல் விடிய விடிய கிரிவலம் வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் ஊருக்கு புறப்பட தயாராகினர். ஆனால் அங்குள்ள பக்தர்கள் வசதிக்கு ஏற்ப பஸ் கிடைக்காததால் 16 தற்காலிக பஸ் நிலையத்திலும் காத்திருந்தனர். இதனால் அங்கும் கூட்டம் அலைமோதியது. அதேபோல் வழக்கமான ரயில் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நாளை வரை 5,669 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை 100 கட்டணமில்லா இலவச இணைப்பு பஸ்கள், ரூ.10 கட்டணத்தில் 100 இணைப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதோடு, வழக்கமான தினசரி ரயில்கள், வாராந்திர ரயில்கள் உள்பட விழுப்புரம், காட்பாடி வழியாக 32 சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 4,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 750க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: