மதுரை – நத்தம் மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதி 3 வாலிபர்கள் பலி: சித்திரை திருவிழா பார்க்க வந்தவர்கள்

மதுரை: சித்திரை திருவிழா பார்க்க வந்தபோது, மதுரை-நத்தம் மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதி 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் மகன் விஸ்வா (21), அதே ஊர் முஸ்லிம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ஹனிபா மகன் சல்மான்கான் (21) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் (20).

இவர்கள் மூவரும் ஒரே டூவீலரில் மதுரை சித்திரை திருவிழாவைக் காண நேற்று நள்ளிரவு ஊரிலிருந்து வந்து கொண்டிருந்தனர். மதுரை-நத்தம் மேம்பாலத்தில் மூவரும் வந்தபோது, எதிர் திசையில் மற்றொரு டூவீலரில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தங்கத்துரை மகன் மாதேஷ் (26) என்பவர் சென்றுள்ளார். திருப்பாலை பகுதியில் மேம்பாலத்தில் ஒன்வேயில் இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஸ்வா, சல்மான்கான், மாதேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வந்த மதுரை தல்லாகுளம் போலீசார், இறந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷ் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: