சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிலும் நாளை வழிபாடு நடத்துகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாகத் தேர்தலைச் சந்தித்தார். அந்தக் கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார்.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வுக்காகவும் குடும்பங்களுடன் நேரம் செலவழிக்கவும் சுற்றுலா சென்றுவருகிறார்கள். தவெக தலைவர் விஜயும் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், விஜய் அதற்கு மாறாக தொடர்ச்சியாக ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுவருகிறார். சில நாட்களுக்கு முன்பு விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் சாமிதரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் அதிகாலையில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து, நாகூர் தர்காவிலும் வழிபாடு நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இன்றே சென்னையில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி சென்று இரவு அங்கு தங்கிவிட்டு, அதிகாலை பிரார்த்தனையில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தனது தனிப்பட்ட பிரச்சனைகள், தேர்தல் முடிவு உள்ளிட்ட காரணங்களுக்காகத் ஜோதிடரின் அறிவுரையின் பெயரில்தான் விஜய் தொடர்ச்சியாக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு சாமிதரிசனம் செய்கிறார் என்று கூறப்படுகிறது.
