வரும் 3ம் தேதி 6 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது 3,365 மாணவர்கள் எழுதுகின்றனர் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஏப்.29: திருவண்ணாமலை மாவட்டத்தில், எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு வரும் 3ம் தேதி 6 மையங்களில் நடக்கிறது. அதில், 3,365 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2026- 2027ம் கல்வி ஆண்டின் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை வரும் 3ம் தேதி நாடு முழுவதும் நடத்துகிறது.

அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் தேர்வு மையம் 1ல் 600 மாணவர்கள், கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையம் 2ல் 480 மாணவர்கள், கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி தேர்வு மையம் 3ல் 480 மாணவர்கள், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 720 மாணவர்கள், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் 720 மாணவர்கள், டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 365 மாணவர்கள் உட்பட மொத்தம் 3,365 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அதற்கான நுழைவுச் சீட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டு, பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, நுழைவுச்சீட்டு மற்றும் அசல் ஆதார் அட்டை ஆகியவற்றை தேர்வு மையத்துக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு இன்று பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஆனாலும், 11 மணியளவில் தேர்வு மையத்துக்கு வர வேண்டும், 1,30 மணிக்கு தேர்வு மையம் கேட் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல, நீட் தேர்வு மையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்கள், கை கடிகாரம், கம்மல் உள்ளிட்ட நகைகள், முழு கை சட்டை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி காமிரா கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: