செய்யாறு, ஏப். 23: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று செய்யாறு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராமகிருஷ்ணன் சித்தூரி, தேர்தல் நடத்தும் அலுவலரும் சப் கலெக்டருமான அம்பிகா ஜெயின் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் வேட்பாளர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற பொது ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து 334 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு பெட்டிகளாக வேன்களில் ஏற்றப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் யூனிட் மற்றும் வாக்குப் பதிவுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டது.
செய்யாறு 9வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ராணுவ படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 334 வாக்குச்சாவடி மையங்கள் 35 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டல அதிகாரி, உதவி அலுவலர் போலீஸ் என 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு வாக்குச்சாவடி மையங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு உத்தரவை சப் கலெக்டர் அம்பிகா ஜெயின் வழங்கினார். மேலும் மொபைல் பார்ட்டி, சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் வரவு செலவு கணக்கு பார்வையாளர்கள் என பல்வேறு பாதுகாப்புகளுடன் தேர்தல் நடத்தும் பணிகள் மும்முரமாக ஆயுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாக்குப்பதிவின்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏதாவது ஏற்படும் நிலை ஏற்பட்டால் முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 20% கூடுதலாகவும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது அதேபோல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அலுவலர்கள் உதவியாளர்கள் திடீரென தேவைப்பட்டால் கூடுதலாக 20 சதவிகிதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் 3 சிறப்பு வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டன. அதன்படி உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் முழுமையாக தலைமை வாக்குப்பதிவு அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,2,3 மற்றும் பெண் காவலர்கள் என அனைவரும் பெண்களே நிர்வாகிகின்றனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் அதிகம் வாக்காளர்களைக்கொண்ட வாக்குச்சாவடியாக அனுப்பத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஒவ்வொரு வாக்குச்சாவடி மையமும் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் விதமாக தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
