சாலையோரங்களில் அதிகரிக்கும் நடமாடும் கூழ் கடைகள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்

கலசபாக்கம், ஏப். 25: சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலையோரங்களில் நடமாடும் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் சதத்தை எட்டி வருகிறது. இதனால் பகலில் வீசும் அனல் காற்றும், இரவில் கடும் புழுக்கத்தாலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் உடல் சூட்டை தணித்துக்கொள்ள மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் சாலைகள் வாகன ஓட்டிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். நட்சத்திர ஓட்டல்களில் ஓய்வெடுக்க ஒதுங்குவதை விட தற்போது சாலை ஓரங்களில் உள்ள கூழ் கடைகள், மோர் இளநீர், தர்பூசணி விற்கும் நடமாடும் கடைகளில் ஒதுங்கி வெப்பத்தை தனித்து கொள்கின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கிராமப் பகுதிகளில் பிரதான சாலைகளில் அதிக அளவில் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இல்லாமல் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக சாலையோரங்களில் உள்ள கடைகளில் சுவைத்து இளநீர், கூழ், மோர், தர்பூசணி என குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிடுவதில் வாகன ஓட்டிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் கலசபாக்கத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலையோரங்களில் உடலுக்கு ஆரோக்கியமும், குளிர்ச்சியூட்டும் கூழ் நடமாடும் வண்டிகளில் வைத்து அதிகளவில் விற்பனை செய்துவருகின்றனர். இதுபோன்ற கடைகளால் தற்போது வெயிலால் கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிறு வேலைவாய்ப்பை உருவாக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.

Related Stories: