மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்திய ரயில்வே அதிரடி: 29,608 பணியாளர்களை நீக்க திட்டம்

சென்னை: இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில், “மனித வள மறுசீரமைப்பு” என்ற பெயரில் சுமார் 29,608 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள “மனித வள மறுசீரமைப்பு இலக்கு 2026-27” என்ற கொள்கை ஆவணத்தில், வரும் 2026-27 நிதியாண்டிற்குள் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய ரயில்வேயில் 14,80,455 நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த 2 சதவீத இலக்கின்படி, நாடு முழுவதும் 29,608 பணியாளர்கள் குறைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் விடுவது அல்லது விருப்ப ஓய்வு திட்டங்கள் மூலம் இந்த ஆட்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நாடு முழுவதிலும் உள்ள 12 ரயில்வே மண்டலங்களிலும் ஒரே சீராக அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 95,322 ஊழியர்கள் உள்ளனர்.

இதில் 1,906 பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 1.27 லட்சம் பணியாளர்களில் 2,544 பேர் குறைக்கப்பட உள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பிராந்தியங்களிலும் இந்த பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ரயில்வே வாரியம் இந்த முடிவுக்கு சில தொழில்நுட்ப காரணங்களை முன்வைக்கிறது. வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களின் வருகை மற்றும் தானியங்கி சிக்னல் முறைகளால் மனித உழைப்பின் தேவை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்திய ரயில்வேயின் 98 சதவீதப் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டதால், பராமரிப்புப் பணிகளுக்கான பழைய கட்டமைப்பு தேவையற்றதாக வாரியம் கருதுகிறது. ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளைக் குறைத்து, அந்த நிதியை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வேயில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது இருக்கும் ஊழியர்களையும் குறைக்க திட்டமிடுவது பாதுகாப்புப் பணிகளை மேலும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

ரயில்வே வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவும் இதனால் கேள்விக்குறியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக ரயில்வே ஊழியர் சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட ஆலோசித்து வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மறுசீரமைப்பு என்பது வளர்ச்சிக்கான படியா அல்லது வேலைவாய்ப்பை அழிக்கும் கத்தியா என்ற கேள்வி இப்போது பலரின் மனதிலும் எழுகிறது.

Related Stories: