சென்னை: சென்னையில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் சுமார் 19,600 ஆயிரம் பேர் தபால் வாக்குகளை போடவில்லை. மேலும் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 52,047 பேர் தபால் வாக்குகளுக்கு எழுதிக் கொடுத்திருந்தனர். அதன்படி அவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் 32,447 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளைச் சரிவரப் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள சுமார் 19,600 பேர் தங்களுக்கு கிடைத்த ஜனநாயக கடமையைச் செய்ய தவறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பணியில் இருந்த பலருக்கு படிவம் 12 மற்றும் 12ஏ பெறுவதில் ஏற்பட்ட தாமதம் அல்லது தபால் வாக்குகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 20ம் தேதியுடன் தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், சுமார் 37 சதவீதம் அரசுப் பணியாளர்கள் வாக்குகளை அளிக்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி-பேட் கருவிகள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
