தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்களுக்கு தடை: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்கள் செய்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 23.4.2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் சென்னை திரும்புவதையொட்டி, 26.4.2026 மற்றும் 27.4.2026 அன்று தாம்பரம் மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சீரான பயணத்தை உறுதி செய்யவும் தாம்பரம் மாநகரக் காவல் துறை பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை
* 26 மற்றும் 27ம் தேதி தென் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலை-வாலாஜாபாத்-காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர் வழியாக, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
* சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள் ஒரகடம் – ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருப்பிவிடப்பட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
பயணிகளுக்கான முக்கிய வசதிகளும், ஆலோசனைகளும்…
* புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் வழித்தடங்களைப், பயணிகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட கனரக வாகன மாற்று வழிகளைப் பின்பற்றி, சீரான போக்குவரத்திற்காக, தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: