மடங்கிய விரல்கள்…தொடர்ந்த செயல்கள்…

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி : 22-4-2026

“அனைத்து உலக மக்களும், இறைவனுடைய பேரருளைப் பெற்று, நன்றாக வாழ வேண்டும்; இணக்கமாக வாழ வேண்டும்; ‘என்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மகான் தமிழ்நாட்டில் ஸ்ரீ பெரும்புதூர் என்கிற திவ்ய தலத்தில் அவதரித்தார். அவர்தான் ஸ்ரீ ராமானுஜர். 120 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார். அவர் திருவடி படாத ஊரே பாரத நாட்டில் இல்லை. இந்தியா முழுவதும், பாத யாத்திரையாக பயணம் செய்து, பக்தி மார்க்கத்தையும் அதன் நிறைவு நிலையான “சரணாகதி மார்க்கத்தையும்”பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.

மனிதகுலம் உய்வதற்கான உயர்ந்த நெறியை மிக எளிய வழியில் காட்டினார்.சுவாமி விவேகானந்தர் ஒரு முறை மிக அழுத்தமாகச் சொன்னார். “நம்முடைய சமய மரபில் ஸ்ரீ ராமானுஜரைப் போல ஒரு உத்தம புருஷரைப் பார்க்கவே முடியாது. ராமானுஜரின் கருணையானது அண்டத்தைப்போல் விரிந்து பரந்து இருக்கிறது. இந்த உயிர்களிடத்தில்தான் அவருக்கு எத்தனை அன்பு?” உண்மைதான். சாஸ்திரங்களை பிழிந்து, அதனுடைய சாரத்தை எடுத்து, ‘‘இறைவனை அடைய இந்த எளிய வழியைப் பின்பற்றினால் போதும்” என்று இனிமையாக எடுத்துரைத்த மாண்பு அவருடையது.

கி.பி 1017 ஆம் ஆண்டு பிங்கள வருடம், சித்திரை மாதம், வியாழக் கிழமை, வளர்பிறை பஞ்சமியன்று, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ராமானுஜர், ஆரம்பத்தில் தன் தந்தையிடம் வேதங்கள் கற்றார். தன்னுடைய பதினாறு வயதில் தஞ்சமாம்பாள் என்பவரை மணந்தார். திருமணமான சில மாதங்களில் தந்தையை இழந்தார். பின் கல்வி கற்ப தற்காக காஞ்சிபுரத்திற்கு குடும்பத்துடன் குடியேறினார். காஞ்சிபுரத்திற்கு பக்கத்திலுள்ள திருப்புட்குழி என்ற ஊரில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைத பண்டிதரிடம் கற்றார். ஆசிரியர் வேத வார்த்தைகளுக்கு பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதினால் பகவத் ராமானுஜர் அவரிடமிருந்து விலகினார்.

அதன்பின் தனக்கு வரும் சந்தேகங்களை, காஞ்சி ஸ்ரீ வரதனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்யும் திருக்கச்சிநம்பி என்ற கஜேந்திரதாசரிடம் தீர்த்துக் கொண்டார். ஏதாவது கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கேட்க, திருக்கச்சி நம்பிகளின் ஆலோசனைப்படி, தினமும் காஞ்சி ஸ்ரீ வரதனுக்கு சாலைக் கிணற்றிலிருந்து அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வந்து சமர்ப்பித்து வந்தார். சாலை கிணறு காஞ்சிபுரத்துக்கு அருகே செவிலி மேட்டிலிருந்து ஓரிக்கை செல்லும் வழியில் இருக்கிறது. ராமானுஜர் இங்கிருந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தினசரி தீர்த்தம் கொண்டு சென்றதை நினைவு கூறும் வண்ணம் அனுஷ்டான உற்சவம் விமரிசையாக நடைபெறும். வேடன் வடிவத்தில் வரதராஜ பெருமாள் இங்கு வருவார். சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும்.

தமக்கு பலவகையிலும் ஆலோசனை சொன்ன திருக்கச்சி நம்பிகளிடம், தன்னைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி ராமானுஜர் வேண்டினார். திருக்கச்சி நம்பிகள் அதனை ஏற்காமல், ‘‘உமக்கு ஏற்ற குருவை ஸ்ரீ வரதன் அனுப்புவார்” என்று ஆறுதல் கூறினார். பின் அவர் வாக்குப்படி, ஆளவந்தாரின் சீடராகிய ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பெரியநம்பிகள் தானே வந்து குருவானார். காலக்கிரமத்தில் பகவானின் திருவுளப்படி துறவறம் பூண்டார். இவருடைய துறவறத்தைக் கண்ட காஞ்சி ஸ்ரீ வரதனும் இவரை யதிராஜர் (துறவிகளின் அரசர்) என்று கொண்டாடினார். இக்காலகட்டத்தில் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ ரங்கத்தை தலைமைப் பீடமாகக் கொண்டு, ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்து வந்தார். காலத்தால் மறைந்து போன ஆழ்வார்களின் பாசுரங்களை வெளிக் கொணர்ந்த, வைணவ சமயத்தின் முதல் குருவான நாதமுனிகளின் பேரன் ஸ்ரீ ஆளவந்தார்.

பகவத் இராமானுஜரின் பல்வேறு பெருமையை அறிந்திருந்த ஆளவந்தார், தம் காலத்துக்குப்பின் வைணவ சமயத்தை, கட்டுக் குலையாமல் காப்பாற்ற, ராமானுஜரை வைணவ சமயத் தலைவராக நியமிக்க எண்ணினார். தம்முடைய இறுதிக் காலத்தை உணர்ந்த ஆளவந்தார், தன்னுடைய சீடர்களில் ஒருவரான ஸ்ரீ பெரியநம்பிகளை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி ராமானுஜரை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்துவர நியமனம் செய்தார். ஆனால், ராமானுஜர் பெரிய நம்பிகளுடன் ஸ்ரீ ரங்கம் வந்து சேர்வதற்கு முன்னமே ஆளவந்தார் மறைந்தார். இறுதிச் சடங்கிற்காகக் கொள்ளிடக் கரையில் வைக்கப்பட்டிருந்த பூத உடலை (சரமத் திருமேனி) மட்டுமே பகவத் இராமானுஜரால் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்த ராமானுஜர் கதறி அழுதார்.

ஆறுதலுக்காக திருவரங்கத்தைச் சேவிக்கலாம் என்று மற்றவர்கள் அழைத்த பொழுது, தான் விரும்பிய தன்னுடைய ஆசார்யனை உயிருள்ளபோதே சேவிக்க விடாத திருவரங்கனை சேவிக்க விரும்ப வில்லை என்று வெறுத்துப் பேசினார்.
அப்பொழுது அவர் ஸ்ரீ ஆளவந்தாரின் பூதவுடலை உற்றுக் கவனித்தார். ஸ்ரீ ஆளவந்தாரின் வலது கையிலுள்ள மூன்று விரல்கள் ஏனோ மடங்கியிருந்தன. அதை வேறு யாரும் கவனிக்கவில்லை. அந்த மடங்கிய விரல்கள் ஏதோ சில செய்திகளை குறிப்பாக தமக்கு உணர்த்துவதாக எண்ணிய ராமானுஜர், பெரிய நம்பிகளிடம் கேட்டார். ஆளவந்தாரின் மனதில் ஏதேனும், நினைத்து, நிறைவேற்ற முடியாத ஆசைகள் இருந்ததா? என்று விசாரித்தார்.
அப்பொழுது அவருடைய பிரதான சீடர்கள் சொன்னார்கள். ‘‘ஆம், ஆளவந்தாரிடம் மூன்று ஆசைகள் இருந்தன.”

அவைகள் என்னென்ன என்று ராமானுஜர் கேட்டார்
1) வேதாந்த விஷயமான ஸ்ரீ வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுதல்.
2) சாமவேத சாரமான ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்க உரை (வியாக்கியானம்) எழுதுதல்.
3) நமக்கு வேதங்கள் தந்த ஸ்ரீ பராசரர் மற்றும் ஸ்ரீ வியாசர் ஆகியோரின் பெயர்களை சரியான முறையில் நினைவு கூர்வது.
ஸ்ரீ ராமானுஜர் அந்த இடத்திலேயே, ‘‘எனது மானசீக குருவின் மூன்று ஆசைகளையும் நிறைவேற்றுவேன்” என்று சங்கல்பம் செய்தார்.
எல்லோரும் வியக்கும் படியாக ஆளவந்தாரின் மடங்கியிருந்த மூன்று விரல்களும் நிமிர்ந்தன.
அந்த ஆசைகளைத் தன் வாழ்நாளில் நிறைவேற்றினார் பகவத் ராமானுஜர்.
பிரம்ம சூத்திரத்திற்கு மிக அற்புதமாக விளக்க உரை எழுதினார்.
அது ஸ்ரீ பாஷ்யம் என்று புகழ் பெற்றது. ராமானுஜருக்கு பாஷ்யக்காரர் என்ற திருநாமம் அமைந்தது.
திருவாய்மொழிக்கு தம்முடைய சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரை கொண்டு ஆறாயிரப்படி என்கின்ற விளக்கவுரையை எழுத வைத்தார்.
மூன்றாவதாக தம்முடைய வலதுகரமாக விளங்கிய சீடர் கூரத்தாழ்வானின் குமாரர்களுக்கு பராசரபட்டர், வேத வியாச பட்டர் என்ற பெயர்களைச் சூட்டி, வைணவ தரிசனம் பரவும்படி அவர்களை நியமித்தார்.
இப்படி ஆளவந்தாரின் மூன்று ஆசைகளையும் தம்முடைய வாழ்நாளில் ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றினார்.
திருவரங்கக் கோயிலில் அவர் செய்த சீர்திருத்தங்கள் அற்புதமானவை. கோயில் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு வருக்கும் கோயிலிலும் அவரவர்களுக்கு ஏற்றவகையில் சேவை புரியவும், அதற்கான மரியாதையைப் பெறவும் வழிமுறைகளை உண்டாக்கினார். ஆழ்வார்களின் பாசுரங்கள் கோயில்களின் கட்டாயம் பாடப் படவேண்டும். தமிழ் வழிபாடு மிக முக்கியமாக நடைபெற வேண்டும் என்ற ஏற்பாட்டை ஏற்படுத்தினார்.
உலகம் உய்ய வந்த ஸ்ரீ ராமானுஜரின் அவதாரத் திருநாளான இன்று, ஒவ்வொரு திருக்கோயிலிலும் இருக்கக்கூடிய அவருடைய திருமேனியை வணங்கி, அவருடைய பேரருளைப் பெற்று வாழ்வோம்.

Related Stories: