மாறும் மனமும், மாறாத தேவனும்

மாலையின் மெதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையில் ஒரு சிறுவன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு அலைகளைவிட சத்தமாக ஒலித்தது. மணலில் கோட்டைகள் கட்டி, அலைகளைத் தொடர்ந்து ஓடி விளையாடிய அவன் வாழ்க்கை கவலையற்றது போலத் தோன்றியது. ஆனால், ஒரு கணத்தில், ஒரு பெரிய அலை வந்து அவன் செருப்பை இழுத்துச் சென்றது. அவன் சிரிப்பு நின்றது. கண்களில் நீர் திரண்டது. அவனைச் சுற்றிலும் யாரும் இல்லை. அவனுக்கு அது ஒரு பெரிய இழப்பாகத் தோன்றியது.

கோபத்திலும் வருத்தத்திலும் அவன் கைகள் நடுங்கின. அந்த வலியில் அவன் மணலில் எழுதினான் “இந்த கடல் ஒரு திருடன்!” என்று. சில நேரம் கழித்து, ஒரு இளைஞன் அங்கே வந்தான். அவன் முகத்தில் சோகத்தின் அடையாளங்கள் ஆழமாக பதிந்திருந்தது. கடலை பார்த்தவுடன் அவன் கண்கள் நின்றுவிட்டது போல இருந்தது. அந்த அலைகள் அவனுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. ஆம், அவன் மனைவியை சுனாமியில் பறித்துக்கொண்டுபோன அதே கடல்.அவன் மெதுவாக மண்டியிட்டு உட்கார்ந்தான். மணலைக் கையில் பிடித்தான்.

கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்தது. “ஏன்?” என்ற கேள்வி அவன் உள்ளத்தில் ஒலித்தது. அந்த உடைந்த இதயத்தில் அவன் எழுதினான், “இந்த கடல் ஒரு கொலையாளி…” என்று. சூரியன் மேலேறியபோது, ஒரு மீனவன் அங்கே வந்தான். அவன் தோளில் வலை, உடலில் சோர்வு இருந்தாலும், இதயத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. இன்று அவன் கடலில் இருந்து நிறைய மீன் பிடித்திருந்தான். அவன் குடும்பத்தினர் பசியின்றி இருப்பார்கள் என்ற சாந்தி அவன் முகத்தில் தெரிந்தது. அவன் கடலை நன்றியுடன் பார்த்தான். “இந்தக் கடல் இல்லையென்றால், என் வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று எண்ணினான்.

அந்த நன்றியுள்ள மனதுடன் அவன் மணலில் எழுதினான்: “இந்த கடல் ஒரு கொடையாளி!” என்று.
அதற்குப் பிறகு, ஒரு முத்து தேடுபவன் வந்தான். அவன் கடலுக்குள் ஆழமாகச் சென்று, உயிரை பணயம் வைத்து அரிய முத்துகளை எடுத்து வந்திருந்தான். அவன் கைகளில் ஒளிரும் முத்துகள் இருந்தன; அவன் கண்களில் நிறைந்தது மகிழ்ச்சியும் பெருமையும். அவன் கடலை நோக்கி ஆழமாக பார்த்தான். “எத்தனை செல்வம் இந்த கடலில் இருக்கிறது!” என்று எண்ணினான். அந்த மகிழ்ச்சியில் அவன் மெதுவாக எழுதினான்: “இந்த கடல் ஒரு பெரிய கொடை வள்ளல்!” என்று.

மாலை நேரம் நெருங்கியது. சூரியன் மறையும் நேரம். அந்த நேரத்தில் ஒரு பெரிய அலை வந்து, மெதுவாக அவர்கள் எழுதிய அனைத்தையும் அழித்துச் சென்றது. ‘‘திருடன், கொலையாளி, கொடையாளி, கொடை வள்ளல்” என்ற அத்தனை பட்டங்களையும் பாரபட்சமின்றி அழித்துப் போட்டது. அன்பான இறைமக்களே, இந்த கதை நம் வாழ்க்கையின் உண்மையை வெளிப் படுத்துகிறது. ஒரே கடலை நான்கு பேர் நான்கு விதமாகப் பார்த்தார்கள். ஆனால், கடல் மாறவில்லை; அவர்கள் அனுபவங்களும் மனநிலையும்தான் மாறியது.

அதைப்போல நாமும் வாழ்க்கையையும், தேவனையும், நம் சூழ்நிலையின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம். சில நேரங்களில் நாம் இழப்புகளை சந்திக்கும் போது, “தேவன் எங்கே?” என்று கேட்கிறோம். நம்முடைய வேதனை நம்மை சந்தேகத்தில் தள்ளுகிறது. ஆனால், ஆசீர்வாதங்கள் வரும்போது, நாம் தேவனைப் புகழ்கிறோம். நம் உணர்ச்சிகள் மாறுகின்றன; ஆனால், தேவன் ஒருபோதும் மாறுவதில்லை.

ஆகையால், சூழ்நிலை சாதகமாயிருந்தாலும், பாதகமாயிருந்தாலும், தேவனுடைய நன்மையை நம்பிக்கையுடன் பற்றிக்கொள்ள வேண்டும். கண்ணீரின் நடுவிலும் விசுவாசத்துடன் நிற்க வேண்டும். ஏனெனில், நாம் புரியாத நேரத்தில் உதவி செய்யவும், நாம் காணாத வழியில் நம்மை நடத்தவும் தேவன் வல்லவராக இருக்கிறார்; காரணம் ‘‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபிரெயர் 13:8) என இறைவேதம் கூறுகிறது.
– அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்

Related Stories: