மதுபானம் கடத்திய வாலிபர் கைது

ஒடுகத்தூர், ஏப்.21: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி 21, 22, 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக நேற்று ஏராளமான குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்க அலை மோதினர். அதேபோல், சிலர் ஒட்டு மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு விற்கவும் அதிகமாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனை தடுக்க போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குருவராஜாபாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(40) என்பது தெரியவந்தது. மேலும், ஆட்டோவில் மதுபானத்துடன் 40 பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோ டிடைவரிடம் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடைகள் விடுமுறையால், மதுபானத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மதுபானத்துடன் 40 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர், வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: