தாலுகா அலுவலகத்தில் திரண்ட மக்கள் அதிகாரிகள் போலீசார் சமரசம் வேலூரில் பூத்சிலிப் கிடைக்காததால்

வேலூர், ஏப்.21: வேலூரில் பூத்சிலிப் கிடைக்காததால் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 847 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதுவரை 10 லட்சத்து 67 ஆயிரம் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பூத்சிலிப்பில் தொகுதி விவரம், பெயர், பாகம் எண், வரிசை எண், புகைப்படம் போன்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதை வைத்து எளிதாக வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உட்பட 12 வகையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர். வீடுகளில் வாக்காளர்கள் இல்லாவிட்டல் மீண்டும் ஒருமுறை சென்று பூத்சிலிப்களை வழங்க வேண்டும். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரிடம் வழங்கக்கூடாது, அரசியல் கட்சிகளிடம் மொத்தமாக வழங்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூத் சிலிப் கிடைக்காத வேலூர் வேலப்பாடி, ஆர்.என்.பாளையம், கஸ்பா, சாய்நாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 35க்கு மேற்பட்டவர்கள் நேற்று காலை வேலூர் தாலுகா அலுவலகத்தில் தங்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உடனே எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார் தாலுகா அலுவலகத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் அதிகாரிகளும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்களுக்கு விரைவில் பூத்சிலிப் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர் கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: