வேலூர், ஏப்.17: வேலூர் மாவட்த்தில் இதுவரை 4.16 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 23ம் தேதி அன்று வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரம், பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டினை அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், மற்றும் குடியாத்தம் என்று 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் 5,56,783 ஆண் வாக்காளர்களும், 5,91,899 பெண் வாக்காளர்களும், 165 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 11,48,847 வாக்காளர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி செய்யப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் உள்ள 11,48,847 வாக்காளர்களுக்கு கடந்த 13ம்தேதி அன்று முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 4,16,298 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
