டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் அதிகாரிகள் நடவடிக்கை வேலூர் காகிதப்பட்டறையில்

வேலூர், ஏப்.21: வேலூர் காகிதப்பட்டறையில் ஒரு டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையில் ஒரே இடத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இருந்ததால் அந்த பகுதி முழுவதும் எப்போதும் மது குடிப்பவர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும் அந்த சாலையில் மாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து போக்குவரத்து நேரிசல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் இடையே கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவுடன் அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதைதொடர்ந்து நேற்று அந்த கடை மூடப்பட்டு மது விற்பனையும் செய்யப்படவில்லை. தொடர்ந்து மற்ற கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த ஒரு கடை நேற்று முதல் மூடப்பட்டது. அதில் இருந்த இருப்பு சரக்குகளும் அரசு குடோனுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மூடப்பட்ட கடைக்கு பதிலாக வேறு இடத்தில் கடை நடத்தவும், மற்ற 3 கடைகளும் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது’ என்றனர்.

Related Stories: