குடியாத்தம், ஏப்.19: அதிமுக பாஜவில் சார்பு அணியாக செயல்படுகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என குடியாத்தத்தில் செ.கு. தமிழரசன் கூறினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான செ.கு. தமிழரசன் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை இந்திய குடியரசு கட்சி ஆதரித்து, அதன் வெற்றிக்காக முழுமையாக பயணம் மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப் போல் தமிழ்நாட்டு திராவிட பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் வட இந்திய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் பாஜக அணியை தோற்கடிக்க அவர்களின் சூழ்ச்சியை தடுக்க இந்திய குடியரசு கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. அதிமுக பாஜகவை பாராளுமன்ற தேர்தலிலேயே ஆதரிக்காத நிலையில் இப்போது சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்துள்ளது. அதிமுக தற்போது பாஜகவின் சார்பு அணியாக செயல்படுகிறது. டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படுகின்ற சார்பு அணியாக அதிமுக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
