தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு இஸ்லாமிய மக்கள் ஆதரவு

தாம்பரம், ஏப்.18: தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், தொகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், நல சங்க நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள மசூதியில் ஜூம்ஆ தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களை சந்தித்த வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடம் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பேசுகையில், ‘இஸ்லாமியர்களுக்கு பிரச்னைகள் வந்தபோது முதல் ஆளாக வந்து முன்நின்று என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.

அதிமுக ஆட்சி அமைந்த உடன் ரங்கநாதபுரம் பகுதி மக்களுக்கு பட்டா, ரங்கநாதபுரம் அருகிலுள்ள ஏரி தூர்வாரப்பட்டு ஏரியை சுற்றி நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பதோடு, ரங்கநாதபுரம் பகுதிக்கு தண்ணீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பேன், என உறுதியளித்தார். அப்போது, உங்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் நிச்சயமாக வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என இஸ்லாமியர்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது தாம்பரம் ஜூம்ஆ பள்ளி தலைவரும், அதிமுக நிர்வாகியுமான எம்.கே.நாகூர் கனி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கோபிநாதன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் மாரி, மார்க்கெட் பாபு, அதிமுக நிர்வாகிகள் அக்பர் அலி, தமீம் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Related Stories: