தேர்தலை முன்னிட்டு அதிரடி; புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 12 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது

பெரம்பூர், ஏப்.13: தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடாது என்பதில் காவல்துறையினர் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து அதில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வரும் ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன்படி பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நாகாத்தம்மன் கோயில் சந்திப்பு அருகே புளியந்தோப்பு காந்திநகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த கலைநிதி (31), விஷ்ணு (38) ஆகிய இருவர் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.ஆர். நகர் பகுதியில் கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (20) மற்றும் கார்த்திக் என்கின்ற தொண்டை கார்த்திக் (22) ஆகிய இரண்டு ரவுடிகளை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பட்டேல் சாலை பகுதியில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த திவாகர் (26), வின்சென்ட் என்கின்ற வில்சன் சாமுவேல் (24) ஆகிய இரண்டு பேரை செம்பியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார் (30), வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பி கல்யாணபுரம் பகுதியில் அஜய் குமார் (27), திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் விஜய் என்கின்ற புறா (23).

புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணேசன் (22), சீனிவாசன் என்கின்ற லோடாங்கு சீனிவாசன் (25), சஞ்சய் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவனிடம் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனை காவல் நிலையம அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்த கலை என்கின்ற புவனேஸ்வரி (26) என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. எனவே, புவனேஸ்வரியை கைது செய்த போலீசார் சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோன்று, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு ரவுடியான வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கின்ற கார்டன் சதீஷ் (36) என்பவரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த வியாசர்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்கின்ற ஹரப்பா (22) என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.
எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நார்த் அவென்யூ சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவரை எம்.கே.பி நகர் போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்கின்ற வண்டு ஆகாஷ் (23), அஜித்குமார் என்கின்ற வெள்ளை அஜித் (25) என்ற இரண்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: